"மனோன்மணீயம்" சுந்தரனார்

"மனோன்மணீயம்" சுந்தரனார்
05.04.1855 - 26.04.1897
மதுரையில் இருந்து ஒரு காலத்தில் கேரளத்து ஆலப்புழைக்குக் குடியேறிய சைவ வேளாளர் வழியில் வந்த பெருமாள் பிள்ளை, மாடத்தி தம்பதிக்கு 1855ம் ஆண்டு ஏப்ரல் 5ம் தேதி சுந்தரனார் பிறந்தார். இவர் நாற்பத்து இரண்டு ஆண்டுகள் மட்டுமே இந்த உலகினில் இருந்திருந்தாலும், வாழ்வாங்கு வாழ்ந்து வரலாற்றினில் செம்மாந்த நிலையினில் திகழ்ந்து 1897ம் ஆண்டு ஏப்ரல் 26ம் தேதி மறைந்தார்.
 
சுந்தரம் அன்றைய கல்வியை முழுமையாக, முறையாகப் பெற்றவர்.இலக்கியம்,வரலாறு,தத்துவம் ஆகிய துறைகளில்  பாண்டித்தியம் பெற்று உயர்ந்தார். சுந்தரனார் கல்வெட்டு ஆய்வாளரும், வரலாற்று அறிஞரும் தத்துவயியலாளரும், வேதாந்தியும் ஆவார்.

சுந்தரனார் ஆங்கிலமொழி அறிவு நிரம்பப் பெற்றவர்.  திருமுருகாற்றுப்படை,நெடுநெல்வாடை ஆகிய பழந்தமிழ் நூல்களை ஆங்கில உரைநடையில் வெளிநாட்டார் அறியும்படி அளித்தார்.

திருஞானசம்பந்தர் காலம், பத்துப்பாட்டு (1891), முற்காலத் திருவாங்கூர் அரசர் (1894), ஆறாம் நூற்றாண்டுத் திருவாங்கூர் அரசர் (1896), திருவாங்கூர் கல்வெட்டுகள் (1897) ஆகிய ஆய்வுக் கட்டுரைகளையும் நூல்களையும் அளித்தார். நூற்றொகை விளக்கம் (1885,1889),  மனோன்மணீயம் (1891), நம்பியாண்டார் நம்பி கால ஆய்வு, பொதுப்பள்ளியெழுச்சி, நற்றாயின் புலம்பல்,சிவகாமி சரிதம் ஆகிய நூல்களைத் தமிழில் படைத்தார்.சீவராசிகளின் இலக்கணமும் பிரிவும் (1892), மரங்களின் வளர்ச்சி (1892), புஷ்பங்களும் அவற்றின் தொழில்களும் (1892)  ஆகிய அறிவியல் நூல்களை எழுதினார்.

1894
ல் கல்வெட்டு ஆதாரங்களின் அடிப்படையில் கி.பி.13ம் நூற்றாண்டுத் திருவாங்கூர் (வேணாடு) மன்னர்களின் வரலாற்றைக் கண்டார். சுந்தரனாரின் சாதனையால் திருவாங்கூர் மன்னர் வரலாறு முழுமை கண்டது.

1891
ல் சுந்தரனார் தாம் இயற்றிய மனோன்மணீயம் நாடகத்தை வெளியிட்டார். இந்த நாடகம்,  தரத்தாலும்,  நுட்பத்தாலும் கட்டுக்கோப்பாலும் சிறந்து விளங்குகிறது. மேலும் பல்கலைக் கழகப் பாடநூலாகவும் கற்பிக்கப்பட்டது. அத்தோடு இந்த நூலில் இடம் பெற்றுள்ள "நீராடும் கடலுடுத்த நிலமடந்தை" என்ற பாடல்தான் தமிழ்த்தாய் வாழ்த்தாக தமிழகம் முழுவதும் இன்றளவும் ஒலிக்கிறது