வேங்கடசாமி நாட்டார்

நற்றமிழ் நாவலர்
வேங்கடசாமி நாட்டார்
12.04.1884   28.03.1944
நடுக்காவேரி என்னும் சிற்றூரில்  முத்துசாமி நாட்டார் - தைலம்மாள் தம்பதிக்கு 12.4.1884 இல்  ஐந்தாவது மகனாக வேங்கடசாமி பிறந்தார். வேங்கடசாமியின் பள்ளிப்படிப்பு 4ம் வகுப்புடன் நின்றது. இவர் தமிழ் இலக்கணம், சிற்றிலக்கியம் முதலியவற்றைத் தாமே பயின்ற தமிழ்ப் பேராசான்.

மதுரைத் தமிழ்ச் சங்கம் நடத்திவந்த பிரவேச பண்டிதம் தேர்வில் 1905லும் பாலபண்டிதம் தேர்வில் 1906லும், பண்டிதம் தேர்வில் 1907லும் சிறப்பாகத் தேறி பல பரிசுகளைப் பெற்றார்.

.மு.வேங்கடசாமி நாட்டார் திருச்சிராப்பள்ளி எஸ்.பி.ஜி கல்லூரியில் 23 ஆண்டுகள் தமிழ்ப் பேராசிரியராய் பணி புரிந்தார். 1933ல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஆசிரியப் பணியில் சேர்ந்த அவர் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு  1941ல் ஓய்வு பெற்றார். ஓய்வுக்குப் பின்னர் தஞ்சைக் கரந்தைப் புலவர் கல்லூரியில் மதிப்பியல் முதல்வர் பொறுப்பினை ஏற்றார். 28.3.1944ல் இறைவனடி சேர்ந்தார். அவரை அவரது சொந்த ஊரில் சமாதி வைத்து, அங்கு கோயில் எழுப்பினர். ஆண்டுதோறும் குருபூஜை நடைபெற்று வருகிறது.

நாட்டார் வகுப்புகளில் பாடம் நடத்தும்போது அமைதி நிலவும். அவருக்கு எல்லாப் பாடங்களும் மனப்பாடம். அவலச்சுவை, பக்திச்சுவை நிறைந்த பாடல்களை இசையோடு படிக்கும்பொழுது அவர் விழிகளில் நீர் ததும்பும். பதம் பிரித்துப் படிக்கும்போதே பொருள் விளங்கும். ஒன்பான் சுவையும் தோன்றுமாறு கற்பிப்பது அவரின் தனிச்சிறப்பு. நாட்டார் அழகு தமிழில் ஆற்றொழுக்காகப் பேசும் திறன் மிக்கவர். அரிய பொருள்களையும் கேட்போர் மனங்கொள்ளுமாறு எளிமையாகச் சொல்லும் இயல்புடையவர். 


சென்னை மாகாணத் தமிழ்ச்சங்கம் 24.12.1940ல் நாட்டாருக்கு "நாவலர்" பட்டம் வழங்கிச் சிறப்பித்தது.

"வேளிர் வரலாற்றின் ஆராய்ச்சி", "நக்கீரர்", "கபிலர்", "கள்ளர் சரித்திரம்"    "கண்ணகி வரலாறும் கற்பு மாண்பும்', "சோழர் சரித்திரம்', "கட்டுரைத் திரட்டு' ஆகியவை இவர் எழுதிய நூல்கள்.
 
 நாட்டார் தலைசிறந்த உரையாசிரியர். இன்னா நாற்பது, கார் நாற்பது, களவழி நாற்பது, ஆத்திசூடி,  கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி, சிலப்பதிகாரம், மணிமேகலை, திருவிளையாடற்புராணம், நன்னெறி  ஆகிய நூல்களுக்கு உரை வகுத்துள்ளார். 1931ல் "பெருஞ்சொல் விளக்கனார்" .மு.சரவண முதலியார் துணையுடன் திருவிளையாடற் புராணத்திற்கும் கரந்தைக் கவியரசு வேங்கடாசலம் பிள்ளையுடன் இணைந்து அகநானூற்றுக்கும் உரை எழுதியுள்ளார்.


தமிழ் இலக்கியம் தன்னைச் சுவைத்து இரசிக்கும் இரசிகனை இழந்தது! தமிழகம் ஒரு நல்ல தமிழ் அறிஞரின் இழப்பால் சற்று துவண்டது!