தெ.பொ.மீனாட்சிசுந்தரனார்

பன்மொழிப்புலவர் தெ.பொ.மீனாட்சிசுந்தரனார்
08.01.1901 -

தெ.பொ.மீனாட்சிசுந்தரனார், 08.01.1901 இல் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் பொன்னுசாமி கிராமணியார் அவர்களின் மகனாகப் பிறந்தார். பொன்னுசாமி கிராமணியாருக்குத் தமிழின் மீதும் தமிழறிஞர்களின் மீதும் இருந்த காதலால் மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் பெயரைத் தன் மகவுக்கு இட்டார்.

வரலாறு, அரசியல், சட்டம் முதலிய துறைகளில் பட்டம் பெற்றவர். தமது இடையறாத முயற்சியால் பதினெட்டு மொழிகளையும், தமிழ்  இலக்கியம், இலக்கணம், சமயம், மொழியியல், தத்துவம் , ஒப்பிலக்கியம், காந்தியியல்  முதலிய பல்வேறு துறைகளயும் கற்றுத்தேர்ந்தார். 1944ல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு பேராசிரியராகப் நியமிக்கப்பட்டார். மீண்டும் 1958ல் அப் பல்கலைக்கழகத்தில் மொழியியல், இலக்கியத் துறைகளின் தலைமைப் பேராசிரியராகப் பொறுப்பேற்றார். அயல்நாட்டுப் பல்கலைக்கழகமான சிகாகோ பல்கலைக்கழகத்தில் 1961ல் தமிழ்ப் பேராசிரியராக பொறுப்பேற்றார்.

தமிழக அரசு "கலைமாமணி" விருதையும் மத்திய அரசு "பத்மபூஷண்" விருதையும் தருமபுர ஆதீனம் "பல்கலைச் செல்வர்" விருதையும், குன்றக்குடி ஆதீனம் "பன்மொழிப் புலவர்" விருதையும் அளித்துச் சிறப்பித்தன.

அமெரிக்கா, ஜப்பான், இரஷ்யா போன்ற வெளிநாடுகளுக்குச் சென்று தமிழின் புகழ் பரப்பிய பெருமகனார் தெ.பொ.மீ. யுனெஸ்கோவின் "கூரியர்" என்னும் இதழ்க்குழுவின் தலைவராக விளங்கினார்..

இவர் மிகச் சிறந்த இலக்கியத் திறனாய்வாளராகவும் விளங்கியவர். தமிழுக்குப் பல புதிய சிந்தனைகளைத் தன் ஆய்வின் மூலம் தந்தவர். ஆராய்ச்சி என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதை அவர்தம் நூல்கள் காட்டுகின்றன. திறனாய்வுத் துறையில் பல புதிய தடங்களைப் பதித்தவர்.

உலகக் காப்பியங்களோடும், உலக நாடகங்களோடும் சிலப்பதிகாரத்தை ஒப்பிட்டுப் பார்த்து, அதை "நாடகக் காப்பியம்" என்றும் "குடிமக்கள் காப்பியம்" என்றும் ஒருவரியில் கூறியவர். சிலப்பதிகாரத்துக்கு இவரைப் போன்று வேறு யாரும் திறனாய்வு எழுதியதில்லை. 

"
தமிழ்மொழி உயர வேண்டுமானால் தமிழன் உயரவேண்டும்," எனச் சங்க நாதமிட்ட முதல் சான்றோர் தெ.பொ.மீனாட்சிசுந்தரனார்.