இராவ்சாகேப்
மு.இராகவையங்கார்
(00.00.1878 – 02.02.1960)
இராமநாதபுரம் சிவகங்கை அரசவைப் புலவராக விளங்கிய முத்துசாமி ஐயங்கார் அவர்களுக்கு 00.00.1878 ஆம் நாள் முத்தான மகனாகப் பிறந்தார் மு.இராகவையங்கார்.
பாண்டித்துரைத் தேவர்களால் 1902 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட "செந்தமிழ்" இதழின் துணைப் பதிப்பாசிரியராக 1906 ஆம் ஆண்டு முதல் 1910 ஆம் ஆண்டு வரை இருந்து பல்வேறு பணிகளைச் செய்துள்ளார். தமிழ்க் கல்வியிலும், தமிழாராய்ச்சியிலும் பேரவாக் கொண்ட தமிழ் மக்கட்கு உறுதுணையாய் நின்ற செந்தமிழ் இதழின் உயிர் நிலையாயிருந்தவர் மு.இராகவையங்கார் அவர்களே.செந்தமிழ்" இதழில் இவர் ஆசிரியராக இருந்த காலத்தில் இலக்கியம், இலக்கணம், வரலாறு, மூலபாடம் ஆகிய தலைப்புகளில் 53 கட்டுரைகள் இவரால் எழுதப்பட்டு வெளிவந்துள்ளன.
"செந்தமிழ்" இதழில் தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதைய்யர் இறைவன் திருவடி நீழலடைந்த பொழுது பாடிய 12 கவிதைகளும், சேதுபதியின் 34 ஆவது வெள்ளணி நாள் விழாவையொட்டிப் பாடிய 5 கவிதைகளும் இடம்பெற்றுள்ளன. இக்கவிதைகள் மூலம் ஒரு கவிஞராகவும் இவர் விளங்கியதைக்காண முடிகிறது.
மதுரைத் தமிழ்ச் சங்கத்திலுள்ள நூல்களில் அருமையான சில நூல்களைப் பற்றிய சிறப்புச் செய்திகளை "நூலாராய்ச்சி" எனும் தலைப்பில் எழுதியுள்ளார்.
"புத்தகக் குறிப்புகள்" எனுந்தலைப்பில் அந்தக் காலத்தில் வெளிவந்த நூல்களைப் பற்றி "மதிப்புரை" எழுதியுள்ளார். இவ்வாறு 62 நூல்களைப் பற்றிய குறிப்புகளை இப்பகுதியில் ஐயங்கார் எழுதியுள்ளார். ஒரு நூலைப் படித்து அதற்கு மதிப்புரை எவ்வாறு எழுத வேண்டும் என்ற நெறிமுறையை இவரெழுதிய மதிப்புரைகள் மூலம் அறிய முடிகிறது.
பெருந்தொகை (இரண்டு தொகுதிகள்) , நிகண்டகராதி, திருக்குறள் பரிமேலழகர் உரை (கையடக்கப் பதிப்பு), நரி விருத்தம் போன்ற நூல்களைப் பதிப்பித்துள்ளார்.
மு. இராகவையங்கார் ஆராய்ச்சித் தொகுதி ,ஆழ்வார்கள் கால நலை, இலக்கியக் கட்டுரைகள் , கட்டுரை மணிகள், சேரன் செங்குட்டுவன், தொல்காப்பியப் பொருளதிகார ஆராய்ச்சி , வேளிர் வரலாறு போன்ற உரைநடை நூல்கள் இயற்றியுள்ளார்.
மு.இராகவையங்கார் தம் 24 ஆம் வயதில் முதன்முதல் "செந்தமிழ்" இதழ் மூலம் ஆய்வுப்பணியைத் தொடங்கி ஏறத்தாழ 58 ஆண்டுகள் வரை எழுத்துப் பணியைத் தம் மூச்சாகக் கொண்டிருந்தார். தமிழ் இலக்கிய வரலாற்றில் இவருக்கென்று ஓரிடம் இருப்பது வெள்ளிடைமலை.