"வித்வத் சிகாமணி" சிந்நயச் செட்டியார்

"வித்வத் சிகாமணி" சிந்நயச் செட்டியார்

 "பெரும்புலவர்" என்று 19ஆம் நூற்றாண்டில் புலவர்களால் புகழப்பெற்றவர் "வித்வத் சிகாமணி" சிந்நயச் செட்டியார். இவர் தேவகோட்டையில் 1855ஆம் ஆண்டு இலக்குமணன் செட்டியார் - லெட்சுமி ஆச்சிக்கு நான்காம் பிள்ளையாகப் பிறந்தார்.

இவருடைய உருவத் தோற்றம் யாரையும் ஈர்க்கக் கூடியது. நல்ல சிவப்பு நிறம், விபூதி, உருத்ராட்சம் அணிந்து பஞ்சகச்ச மேலாடையில் சிவப்பழமாய்க் காட்சி அளிப்பார். கையில் எப்பொழுதும் ஓலைச்சுவடி இருக்கும். இரத்தினக் கம்பளத்தில் வீற்றிருப்பார்

இராமநாதபுரம் அரசர் பாஸ்கர சேதுபதியின் உறவினர் பாண்டித்துரைத் தேவர் மிகச் சிறந்த புலவர். அவர், சிந்நயச் செட்டியாரின் இனிய தோழர். இருவரும் அடிக்கடி சந்தித்து அளவளாவுவர். பாண்டித்துரைத் தேவர் நான்காம் தமிழ்ச் சங்கத்தை மதுரையில் நிறுவ முயன்றபோது, அவருக்கு உறுதுணையாக நின்றவர் சிந்நயச் செட்டியார்.
அவர் எழுதியுள்ள நூல்கள்,
  • மதுரை மீனாட்சி அம்மைப்பதிகம்
  • நகரத்தார் வரலாறு
  • திருவொற்றியூர்ப் புராணம்
  • குன்றக்குடி மயின்மலைப் பிள்ளைத் தமிழ்
  • தேவகோட்டை சிலம்பைப் பதிற்றுப்பத்து அந்தாதி
  • இராமேசுரம் தேவைத் திரிபு அந்தாதி
  • திருவண்ணாமலை அருணைச் சிலேடை வெண்பா
  • காசி யமக அந்தாதி
  • வெளிமுத்திப் புராணம்
  • கும்பாபிஷேக மகிமை
  • ஐம்பெரும் காப்பிய ஒப்பீடு
  • கண்டனூர் மீனாட்சி அம்மை பாடல்
முதலியன

இரா.இராகவையங்கார் தன் மாணவர் மு.இராகவையங்காருக்குப் பாடம் கற்பித்தபொழுது, சிந்நயச் செட்டியாரின் சில நூல்களையும் கற்பித்தது குறிப்பிடத்தக்கது
தன் பெயருக்கு அவர் விளக்கம் கூறினாராம் இப்படி, "சித்துடனே நயம் சேர்ந்தால்சிந்நயம்" ஆகும்
தேவகோட்டை அருகில் "இறகுசேரி", "கண்டதேவி" என்ற இரு கிராமங்கள் உள்ளன. அவற்றை அவர், இராமாயணத்துடன் ஒப்பிட்டுக் கூறுவார். "ஜடாயுவின் இறகு வீழ்ந்த இடம் இறகுசேரி", அனுமன், "கண்டேன் தேவியை என்று கூறிய இடம் கண்டதேவி. ஆகவே தேவகோட்டை என்பது தேவிகோட்டை ஆகும்" என்பார்

சிந்நயச் செட்டியார் 1900ஆம் ஆண்டு காலமானார். இவர் இறந்த மாதமும் தேதியும் கூட அறியக்கிடைக்கவில்லை என்பது பெரும் குறையே! என்றாலும் அவரது தமிழ்த்தொண்டின் புகழ் என்றென்றும் குறையாது என்பது உண்மையிலும் உண்மை!