கவிராச பண்டிதர்
செகவீரபாண்டியனார்
10.3.1886 - 17.6.1967
வீரபாண்டிய கட்டபொம்மன் வழிவந்த குடும்பத்தில் தோன்றிய பெருமாள்சாமி என்பவருக்கும் ஆவுடையம்மைக்கும் 10.3.1886ல் பிறந்தார் கவிராச பண்டிதர் செகவீரபாண்டியனார்.
இவரது மூன்றாம் வயதில் தந்தை இறந்து போனார். தொடர்ந்து படிக்கமுடியாத சூழல்; எனினும், ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, திவாகரம், தாயுமானவர் பாடல் முதலான பல்வேறு நூல்களைத் தாமாகவே படித்துப் புலமை பெற்றார். இடையே மற்போர், விற்போர் முதலானவற்றையும் கற்றுக் கொண்டார். அரிமளம் என்ற ஊரில் ஓராண்டு துறவிபோல் வாழ்ந்து. வேதாந்த நூல் பலவும் கற்றுத் தெளிந்தார். இலக்கண முத்துக் கவிராயரிடம் தமிழ் கற்றார். ஆங்கில மொழியையும் தாமாகவே படித்துப் புலமை பெற்றவர். தமது 19ம் வயதிலேயே "ஆசிரியர்" என்று அனைவரும் போற்றும் நிலைக்கு உயர்ந்தார்.
பாண்டியனார், நாநலம் மிக்கவர். சிறந்த புராணச் சொற்பொழிவாளர் எனும் புகழைப் பெற்றவர். கம்பராமாயணம், பெரியபுராணம் ஆகியவற்றை மொழிவதில் வித்தகராக விளங்கினார். தமிழகத்துப் பட்டிதொட்டியெல்லாம் இவர் புகழ் பரவியது. ஆனாலும் இத்தகைய பேச்சுகள் காற்றோடு காற்றாகப் பயனின்றிப்போகும் என்று உணர்ந்தவர், நூல் எழுதுவதே தக்க பணி என்று எண்ணினார்.
மதுரை மேலமாசி வீதியில் தாம் வசித்த இல்லத்திற்குத் "திருவள்ளுவர் நிலையம்" என்றும், தாம் தொடங்கிய அச்சகத்திற்கு "வாசுகி அச்சகம்" என்றும் பெயரிட்டார். எவரையும் வேலைக்கு அமர்த்தாமல் அச்சுக் கோர்ப்பது முதலான பணிகளைத் தாமே செய்தார். பாண்டியனார். தம்நூலில் ஓரிடத்திலும் அச்சுப்பிழை வாராமல் தாமாகவே அனைத்தையும் பார்த்து நூல்களை வெளிக்கொணர்ந்தார்.
மாசிலா மணிமாலை , அணி அறுபது , தருமதீபிகை, திருக்குறட் குமரேச வெண்பா ,வீரபாண்டியம், இந்தியத் தாய்நிலை , உலக உள்ளங்கள், கம்பன் கலைநிலை, அகத்திய முனிவர் , கவிகளின் காட்சி, தமிழர் வீரம் , பாஞ்சாலங் குறிச்சி வீரசரித்திரம் போன்ற பல நூல்களை எழுதியுள்ளார் பாண்டியனார்.
"திருக்குறளை உரையுடன் மட்டும் வெளியிட்டால் அத்துணையளவு பயனில்லை" என்று உணர்ந்த பாண்டியனார், ஒவ்வொரு குறளுக்கும் அதற்கேற்றவாறு கதை ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் குறளோடு மேலும் இரண்டு அடிகள் சேர்த்து முழு வெண்பாவாகப் பாடியதோடு மட்டுமன்றி அதற்கான முழு விளக்கத்தையும் தந்துள்ளார். ஒவ்வொரு பாட்டிலும் "குமரேசா" எனும் விளி அமைந்திருக்கும். அதனால் இதற்குத் "திருக்குறட் குமரேச வெண்பா" என்று பெயர்.
17.6.1967ல் நெஞ்சு வலியால் பாதிக்கப்பட்டு, மருத்துவம் பலனின்றி இறைவனடி சேர்ந்தார்.