மயிலை சிவமுத்து

தமிழ்நெறிக் காவலர்                               
  மயிலை சிவமுத்து
15.01.1892 - 06.07.1968
சென்னை, மயிலாப்பூரில் சிவானந்த முதலியாருக்கும் விசாலாட்சி அம்மையாருக்கும் இரண்டாம் மகனாக 1892ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி சிவமுத்து பிறந்தார். பெற்றோர் இட்ட பெயர் முத்துக்குமாரசாமி. ஊர்ப் பெயரோடு தந்தையார் பெயரையும் இணைத்து மயிலை சிவமுத்து எனத் தம் பெயரை மாற்றிக் கொண்டார்.

இவர் ஏழாம் வகுப்பு வரை படித்தார். தந்தையார் மறைவுக்குப் பிறகு, குடும்பப் பொறுப்பைக் கவனிக்க வேண்டிய சூழ்நிலையில் சென்னை உயர் நீதிமன்ற அச்சகத்தில் அச்சுக் கோக்கும் பணியில் ஈடுபட்டார். ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் சிறு சிறு நூல்களைப் படித்துத் தமிழ் மற்றும் ஆங்கில அறிவை வளர்த்துக்கொண்டார்.தமது 22 ஆம் அகவையில் ஓர் தொடக்கநிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் ஆனார். 

இவர் முதன்முதலில் எழுதிய நூல் "என் இளமைப் பருவம்" என்னும் நூலாகும். இந்நூல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்குத் துணைப் பாட நூலாக வைக்கப்பட்டது. "நித்தில வாசகம்" என்னும் தமிழ்ப் பாட நூல் வரிசையை அவர் இயற்றினார். இதுவே பின்னர்த் தோன்றிய பாடப்புத்தக வரிசைகளுக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்தது. இப்பாடநூல் அவரது புகழைப் பரவச் செய்தது.

இவர் இயற்றிய "முத்துப் பாடல்கள்" என்னும் நூலைப் பாராட்டி மத்திய அரசு அவருக்குப் பரிசளித்தது. குழந்தை எழுத்தாளர் சங்கம் 21.11.1959 ஆம் நாள் குழந்தைகளுக்கான இவரது இலக்கியத் தொண்டைப் பாராட்டி மாநாடு நடத்திக் கேடயம் வழங்கியது.

சென்னை முத்தியால்பேட்டை உயர்நிலைப் பள்ளியில் மக்கள் சார்பில் "தமிழ்நெறிக் காவலர்" பட்டம் 10.04.1960 ஆம் நாள் வழங்கப்பட்டது. தமிழகப் புலவர் குழுவைச் சேர்ந்த நாற்பத்தொன்பதின்மருள் ஒருவராகத் திகழ்ந்தார் இவர்.  

1931ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட மாணவர் மன்றத்தின் தலைமைப் பொறுப்பை 1957இல் ஏற்றார். 1961இல் "நித்திலக்குவியல்" என்னும் திங்களிதழைத் தொடங்கினார். மன்றத்துக்காக சொந்தக் கட்டடம் வாங்கி, 1963இல் இலவசத் தொடக்கப் பள்ளியைத் தொடங்கினார்இன்றைய மாணவர் மன்றத்தின் வளர்ச்சிக்கும் பொலிவுக்கும் வித்திட்ட பெருமை மயிலை சிவமுத்துவையே சாரும்.

நாடு உரிமை பெற்ற பிறகும் தாய்மொழி கற்பிக்கும் தமிழாசிரியர் நிலை உயரவில்லை. அது உயர்வு பெறுவதற்காக "துக்கவாரம்" கடைபிடித்தார். 1938இல் இந்தி மொழி, பள்ளிகளில் கட்டாயப் பாடமாக்கப்பட்ட போது இந்தி எதிர்ப்பு அறப்போரில் ஈடுபட்டார்.

தங்க நாணயம், சிவஞானம்,நாராயணன், சம்பந்தன், பரந்தாமன், நித்திலக் கதைகள், நித்திலக் கட்டுரைகள், நல்ல எறும்பு, நல்ல குழந்தை, முத்துக் கட்டுரைகள் என எண்ணற்ற இலக்கியம் படைத்த இந்த இலக்கியச் செம்மல் 1968ஆம் ஆண்டு ஜூலை மாதம் 6ஆம் தேதி இயற்கை எய்தினார்.