பா.வே. மாணிக்க நாயக்கர்!

அறிவியல் தமிழ் வளர்த்த தமிழிஞர் , மறைக்கப்பட்ட மாமனிதர்
பா.வே. மாணிக்க நாயக்கர்!
25.02.1871  -   25.12.1931


பா. வே. மாணிக்க நாயக்கர் சேலம், பாகல்பட்டி என்னும் சிற்றூரில் பெற்றோர் வேங்கடசாமி நாயக்கர் - முத்தம்மையார் தம்பதிக்கு 25.02.1871  அன்று மகனாக பிறந்தார். சென்னை கிண்டி பொறியியல் கல்லூரியில் பயின்று, 1896ல் தமது 24ம் வயதில் கட்டுமானப் பொறியியல் அறிஞராகப் பணியாற்றிய போதும் இவர் தமிழில் சிறந்த புலமை பெற்றிருந்தார்.

மறைமலையடிகளார் தொடங்கிய "தனித்தமிழ்" இயக்கத்துக்கு மாணிக்க நாயக்கர் புரவலராக இருந்துள்ளார்.

"தமிழ்ப் பல்கலைக்கழகம் ஒன்று உருவாக வேண்டும்," என்னும் தமது கருத்தை 1931ம் ஆண்டுக்கு முன்பே நாயக்கர் கொண்டிருந்தார்.

"அறிவியல் தமிழ்ச் சொற்களின் அகராதி" என்னும் தலைப்பில் இவரது தொகுப்புகள் சென்னை மறைமலையடிகள் நூலகத்தில் இன்றும் உள்ளன.

1923 - 24ல் "செந்தமிழ்ச்செல்வி" இதழ் ஆசிரியர் குழு உறுப்பினராகவும் இருந்து 48 தமிழ் ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் அந்த இதழில் எழுதிவந்துள்ளார்.

கம்பன் புளுகும் வான்மீகியின் வாய்மையும் ,தமிழ் ஒலியிலக்கணம், தமிழ் எழுத்துகளின் நுண்மை விளக்கம் போன்ற நூல்கள் வழி தமிழை வளப்படுத்தியுள்ளார்.

தமிழகம், மரநூல், அறிவியல் தமிழ்ச் சொற்கள், வடிவு திருந்த அறிவு வளர்ந்த கதை, ஆகிய கட்டுரைகள் செந்தமிழ்ச்செல்வி திங்களிதழில் வெளிவந்தன.

"அறிவியல் தமிழ்" பற்றிய சில தொடர்கள் "தமிழகம்" என்னும் இதழிலும், "ஜஸ்டிஸ்" இதழிலும் வெளிவந்தன.

தமிழ் உச்சரிப்பு (Tamil Phonology) என்னும் தலைப்பில் அமைந்த சொற்பொழிவுகளை தமிழ் நாட்டின் பல ஊர்களிலும் நிகழ்த்தியுள்ளார்.

அன்றைய "ஜஸ்டிஸ்" இயக்கம் நாயக்கரின் பணிகளைப் பாராட்டி ஒரு கையேடு வெளியிட்டது. இந்நூலைப் படிக்கும் போது, அந்த இயக்கம் அவரை முழுமையாக ஆதரித்ததை அறியமுடிகிறது.

"தமிழ் எழுத்துகளின் நுண்பொருள் விளக்கம்" என்னும் தமது நூலில் தமிழ் எழுத்துகளுக்கெல்லாம் முளை எழுத்து (Root letter)"ஓ" என்றும் அது எல்லா வடிவங்களும் பிறக்கக் காரணமானது என்றும் கூறி ஓங்காரத் தத்துவத்தை வலியுறுத்தியுள்ளார்.

"ஐரோப்பியர்கள் டார்வின் என்பவருக்குப் பிறகு கண்டறிந்த இயற்கை உண்மைகளையும், இன்னும் காணாதிருக்கின்ற பெரும் பகுதிகளையும் நம் தமிழ் முன்னோர் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நன்கு உணர்ந்திருக்கிறார்கள்," என்பது நாயக்கரின் ஆழ்ந்த நம்பிக்கை.

"பண்டைத் தமிழ் மொழிச் செவ்வியையும், தமிழகத்தோர் வன்மையும், சிறக்கப் பரக்கச் சிதைவின்றிக் காட்டக் கிடைத்த அழியாப் பெருந்திடரித் (திடர் - மலை) தொல்காப்பியம் ஒன்றே" என்னும் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்தார் மாணிக்க நாயக்கர்.

தமது அறுபதாம் வயதில் (25.12.1931) நள்ளிரவில் இயற்கை எய்தினார்.