கோவைக்கிழார்

கொங்குக் குலமணி' –
கோவைக்கிழார்
சி.எம்.இராமச்சந்திரன் செட்டியார்


இராமச்சந்திரன் செட்டியார் என்ற  இயற்பெயர் கொண்ட சைவ ஞாயிறு கோவைக்கிழார் வழக்குரைஞராய் இருந்து, பிறகு தண்டமிழில் மேதையானவர். கோவைக்கிழார் கல்லூரியில் கற்றபாடம், இயற்பியல், சட்டவியல்.

கோவைக்கிழார் தமிழ் இலக்கண, இலக்கியங்களை, திருச்சிற்றம்பலம் பிள்ளை, சபாபதிப் பிள்ளை, உ.வே.சாமிநாதய்யர் போன்றோரிடம் கற்றுக்கொண்டார். இராமச்சந்திரன் செட்டியார் 1888-ஆம் ஆண்டு நவம்பர் 30-ஆம் தேதி மருதாசலம் செட்டியார்-கோனம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார்.

தமிழ், சம்ஸ்கிருதம், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், இந்தி, உருது, மலையாளம் என எட்டு மொழிகளில் சிறந்த புலமை பெற்றிருந்தார்.

கோவையில் வழக்குரைஞராய் பல்லாண்டுகள் பணிபுரிந்தார். அத்தொழிலில் அவர் மனம் ஈடுபடவில்லை. தமிழ்த் தொண்டிலும் சமயத் தொண்டிலும் ஆர்வத்தோடு ஈடுபாடு கொண்டார்.

கோவைக்கிழார் கோயில்களின் வருவாயில் ஒரு பகுதியை, சமய வளர்ச்சிக்கென ஒதுக்கி அதன் மூலம் சமயச் சொற்பொழிவுகள், நூல்கள் வெளியிடுதல், நூல் நிலையங்கள் அமைத்தல் ஆகிய திட்டங்கள் வகுத்துச் செயல்படுத்தினார். கோயில்களில் திருமுறைகள் ஓதுதல், திருமுறைப் பதிகங்களைக் கல்லில் பதித்தல், தல வரலாறுகள் எழுதுதல், கோயில் குடமுழுக்குகளை ஆகம முறைப்படி செய்தல் ஆகியவற்றுக்காக அயராது உழைத்தார். தவத்திரு குன்றக்குடி அடிகளாருடன் சேர்ந்து தமிழ் நாடெங்கும் உள்ள கோயில்களில் தமிழில் அர்ச்சனை நடைபெறப் பாடுபட்டார்.

சமய ஆதீனங்களில் தமிழ்க் கல்லூரிகள் தோன்றக் காரணமாக இருந்தார். கொங்குநாட்டுப் பேரூர் சாந்தலிங்கர் திருமடத்தின் சார்பிலும் தமிழ்க்கல்லூரி ஒன்றைத் தவத்திரு சாந்தலிங்க ராமசாமி அடிகளாருடன் சேர்ந்து தோற்றுவித்தார், அக்கல்லூரியின் முதல்வராகவும் பணியாற்றினார். திருமடத்தின் சார்பில் உயர்நிலைப் பள்ளி தோன்றவும் காரணமாக இருந்தார்.

கோவைத் தமிழ்ச் சங்கத்தின் செயலாளராக கோவைக்கிழார் இருந்தபோது, "கொங்குமலர்' என்னும் திங்கள் இதழை நடத்தினார். சைவசித்தாந்த சமாஜத்தின் இதழான, "சித்தாந்தம்' இதழுக்கும் ஆசிரியராக இருந்து அரும் பணியாற்றினார்.

தஞ்சை சரஸ்வதி மகாலில் உறுப்பினராய் இருந்தபோது, "இராமப்பய்யன் அம்மானை' என்ற நூலையும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் வழியாக "தமிழிசைக் கருவிகள்' என்ற நூலையும் பதிப்பித்து வெளிப்படுத்தினார்.

கோவைகிழார், தமிழ் நாட்டின் வரலாற்றையும், புலவர்களின்  வரலாற்றையும், கல்வெட்டு-செப்பேடுகளின் துணையால் ஆராய்ந்து தெளிவுபடுத்தியுள்ளார்.

இதுவரையிலும் யாரும் அறிந்து எழுதாத "கொங்குநாட்டு வரலாற்றை' பலரும் போற்றும் வண்ணம் எழுதியுள்ளார். ஏறக்குறைய எண்பது நூல்களுக்கு மேல் எழுதியுள்ளார். இன்னும் அச்சில் ஏறாத நூல்களும் பல உள்ளன.

கோவைக்கிழாரின் பணியைப் பாராட்டி ஆங்கில அரசு, 1930-இல் "இராவ்சாகிப்' என்ற பட்டத்தையும் 1938-இல் "இராவ்பகதூர்' என்ற பட்டத்தையும் அளித்துச் சிறப்பித்தது. சென்னை மாநிலத் தமிழ்ச்சங்கம், "செந்தமிழ்ப்புரவலர்' என்ற பட்டத்தையும் சென்னை மாநிலச் தமிழ்ச்சங்கம், "சிந்தாந்தப்புலவர்' என்ற பட்டத்தையும் மதுரை ஆதீனம் "சைவஞாயிறு' என்ற பட்டத்தையும் வழங்கிப் பாராட்டியது. கொங்குநாட்டு வரலாறு என்ற நூலுக்குத் தமிழ் வளர்ச்சிக்கழகம் பரிசளித்துப் போற்றியது. கோவை நன்நெறிக்கழகம் பொற்பதக்கம் வழங்கிப் போற்றியது.

இச்சான்றோர், 1969-ஆம் ஆண்டு டிசம்பர் 3-ஆம் தேதி இயற்கை எய்தினார். இவரின் சமாதி பேரூர் தமிழ்க்கல்லூரித் தோப்பில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது