தியாகராசச் செட்டியார்


தமிழ்ப் பேராசான் தியாகராசச் செட்டியார்

தேசிகன்



திருச்சி மாவட்டம் லால்குடி தாலுகாவில் உள்ள பூவாளூரின் பெயரைத் தமிழ் இலக்கிய வரலாற்றின் பக்கங்களில் நிரந்தரமாகப் பதித்த பெருமைக்குரியவர் மகாவித்வான் தியாகராசச் செட்டியார். செட்டிமார்களில் பூவாளூர் செட்டியார் என்ற பிரிவினர் திருச்சி மாவட்டத்தின் பல்வேறு ஊர்களிலும் வாழ்கின்றனர். விவசாயத்தையும், வர்த்தகத்தையும் தொழிலாகக் கொண்ட இச்செட்டிமார்கள் சிவபக்த சிகாமணிகள். பொருட்செல்வமும் அருட்செல்வமும் ஒருங்கே பெற்ற இக்குலத்தில் சிதம்பரம் செட்டியாரின் மூத்த புதல்வராக 1826ம் வருஷம் பிறந்தவர் தியாகராசச் செட்டியார்.

உரிய வயதில் திண்ணைப் பள்ளிக்கூடமொன்றில் தியாகராசச் செட்டியார் கல்வி கற்கத் தொடங்கினார். ஆரம்பப் படிப்பில் அவர் தமிழும் கணிதமும் கற்றார். குறிப்பாக தமிழ் அவர் சிந்தையைப் பெரிதும் ஈர்த்தது. நாளாக, நாளாகத் தமிழின்பால் ஈர்ப்பு பெருகியவண்ணம் இருந்தது. அதன் விளைவாய் பூவாளூரை அடுத்துள்ள ஊர்களில் வாழ்ந்த பல புலவர்களைச் செட்டியார் போய்ப் பார்த்து அவர்களிடம் பல தமிழ் நூல்களைப் பாடம் கேட்டார். ஆயினும் தமிழில் ஆழமான புலமை பெறும்படி தனக்கு ஒரு நல்ல தமிழாசான் வேண்டும் என்று ஆவலுடன் காத்திருந்தார்.

அந்த நாளில் திரிசிரபுரம் என்று அழைக்கப்பட்ட திருச்சியில் மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை தமிழ் பீடத்தில் கொலுவிருந்து அரசோச்சிய காலம். ஒரு முறை பூவாளூரைச் சேர்ந்த சில செல்வர்கள் பிள்ளையவர்களைத் தங்கள் ஊர் கோயில் தொடர்பாக ஏதேனும் நூல் செய்ய வேண்டுமென்று கோரி பூவாளூருக்கு அழைத்து வந்தனர். பிள்ளையவர்களின் வருகையே தியாகராசச் செட்டியாரின் வாழ்வில் ஒரு முக்கிய திருப்புமுனை ஆயிற்று.

பிள்ளையவர்களையும் அவருடன் வந்த மாணாக்கர்களையும் அவர்களுக்கு பிள்ளையவர்கள் பாடஞ்சொல்லும் திறத்தையும் அவரது இணையற்ற புலமையையும் அருகிருந்து கண்டு வியந்த செட்டியார் இவரே நமது ஆசான் என்று உள்ளத்தில் உறுதி செய்து கொண்டார். அவருடன் நெருங்கிப் பழகத் தொடங்கினார். செட்டியாரின் விநயத்தையும் தமிழ்ப்படிப்பில் அவர் காட்டும் ஆர்வத்தையும் பார்த்து பிள்ளையவர்கள் மிகவும் மகிழ்ந்தார்.

பிள்ளையவர்கள் தமது ஊரான திருச்சியில் பலருக்குத் தமிழ்ப் பாடம் சொல்வதை அறிந்த செட்டியார் எப்படியாவது திருச்சியிலேயே தங்கி பிள்ளையவர்களிடம் தமிழ் பயில்வதென்று முடிவெடுத்தார். திருச்சியில் செட்டியாரின் சிறிய தகப்பனார் வர்த்தகம் செய்து பெரும் செல்வராக விளங்கினார். அவரது இல்லத்தில் தங்கிக் கொண்டு பிள்ளையவர்களிடம் தமிழ் பயிலலாம் என்பது செட்டியாரின் திட்டம். ஆனால் செட்டியாரின் தந்தை இதை ஏற்கவில்லை. தன் மகன் விவசாயத்தைக் கவனித்துக் கொண்டு வீட்டோடு இருக்கவேண்டும் என்பது அவர் அவா. ஆனால் செட்டியாரின் பிடிவாதம் வென்றது.

1844ம் ஆண்டு குரோதி வருஷத்தில் பிள்ளயவர்களிடம் தியாகராசச் செட்டியார் மாணாக்கராகச் சேர்ந்தார்.

பிள்ளையவர்களிடம் வரும்முன்பே பலரிடமும் படித்து தமிழறிவை விருத்தி செய்து கொண்டது செட்டியாருக்கு உதவியாக இருந்தது. முதன் முதலாக பிள்ளையவர்களிடத்தில் அவர் பாடம் கேட்ட நூல் "திருக்கோவையார்". அந்த நாளில் பிள்ளையவர்களிடம் செட்டியார் தமிழ்ப்பாடம் கேட்ட போது;
  • திருத்தான்தோன்றி மருதநாயக முதலியார்
  • கடம்பர் கோயில் சுப்பராய முதலியார்
போன்றோரும் உடன்பயின்றனர்.

செட்டியார் மிக அழகாகவும் விரைவாகவும் பனை ஓலையில் எழுத வல்லவர். இத்திறமையால் பாடம் கேட்ட நேரம் போக மற்ற நேரங்களில் பிள்ளையவர்களின் பிரத்தியேக எழுத்தராகவே செட்டியார் இருந்தார். பிள்ளையவர்கள் இயற்றிய நூல்களையெல்லாம் தன் கைப்பட எழுதியதால் அவை மனத்தில் பதிந்ததுடன் ஆசிரியருடனான உறவையும் சிறப்பாக வளர்த்தன. பின்னாளில் பிள்ளையவர்களின் மூத்த மாணவர் என்ற சிறப்பை செட்டியார் பெற்றார்.

காலப்போக்கில் பிள்ளையவர்களிடம் பல்வேறு இலக்கண நூல்களையும், ஏராளமான இலக்கியங்களையும் பாடம் கேட்ட செட்டியார் இணையற்ற பெரும் புலமையைப் பெற்றவரானார். குறிப்பாக இலக்கணத்தில் நிகரற்ற புலமை படைத்தவராய் விளங்கினார் செட்டியார்.

பிள்ளையவர்களின் மூத்த மாணவர் என்ற வகையில் அவர் உத்தரவுப்படி பிறருக்கு சிறு நூல்களைச் செட்டியார் பாடம் சொல்லத்தொடங்கினார். அதனால் அவரது தமிழறிவு மேலும் ஆழப்பட்டது. தான் புலமையோடு சிறந்து விளங்குவது மட்டுமின்றி, கடினமான பாடங்களையும் மாணவர்கள் மனத்தில் பதியவைக்கும் அருங்கலை இயல்பாகவே செட்டியாருக்குக் கை கூடிற்று.

இலக்கணத்தில், "மருவூ மொழி" என்பதை செட்டியார் மாணவர்களுக்கு விளக்கும் அழகைப் பாருங்கள்.

"என் சொந்தக்காரர்களில் ஒருவரை "விராட்டி" என்று நாங்கள் கூப்பிடுவோம். ஏன் தெரியுமா?" என்று கேட்பார்.
மாணவர்கள், "அவர் விராட்டி விற்பவராக இருக்கலாம்," என்பார்கள்.
"இல்லை. அவர் பெயர் வீரராகவச் செட்டி. அதுதான் விராட்டியாகிவிட்டது," என்பார்கள்.
வகுப்பு முழுவதும் கொல்லென்று சிரிக்கும்.
வீரராகவச் செட்டி என்பது விராட்டி என்று வந்துவிட்டதல்லவா? அதுதான் மருவூ மொழி.

  • பூவராகன் என்பதைப் "பூரான்" என்பதும்
  • மகாலிங்கத்தை "மாஞ்சு" என்பதும்
  • தர்மராஜப் பிள்ளையை "தம்பாச்சியா"ப் பிள்ளை என்பதும்
  • குலோத்துங்கச் சோழன் இருப்பு என்பதை "குளத்துக்கிருப்பு"
என்று சொல்வதும் மருவூ மொழிகளே என்பார் செட்டியார். இப்படி நகைச்சுவை ததும்ப இலக்கணத்தை புகட்டுவதில் செட்டியாருக்கு நிகர் அவரே.

இந்தத் திறமையே பிற்காலத்தில் அன்று மிக உயர்ந்த பதவியாகக் கருதப்பட்ட கும்பகோணம் பள்ளியின் தமிழாசிரியர் பதவியை 1865ல் அவருக்குத் தேடியும் கொடுத்தது.

அந்தப் பதவியிலிருந்து தான் ஓய்வுபெறும் காலம் வந்தபோது தான் மிகவும் அன்பு வைத்தவரான .வே.சாமிநாதய்யர் இந்த வேலையைப் பெறும்படி செய்தார். .வே.சா. எழுதிய என் சரித்திரத்தில் இதை விரிவாகப் படிக்கலாம். பின்னாளில் சென்னையிலுள்ள தன் இல்லத்தின் பெயரையே செட்டியார் நினைவாக "தியாகராச விலாசம்" என்று வைத்து நன்றி பாராட்டினார் ஐயர். இக்கட்டுரையில் வரும் தகவல்கள் ஐயர் எழுதிய "வித்துவான் தியாகராச செட்டியார்" நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளன.

பிள்ளையவர்களைப் போலவே திருவாவடுதுறை ஆதீனத்தில் மிகப் பெரிய மதிப்பைப் பெற்றவர் செட்டியார். அதுமட்டுமின்றி அன்றைய தமிழ் உலகில் செட்டியாரின் தீர்ப்பை அனைவரும் மதித்தனர். அவர் ஒரு தமிழ்ப்பாட நூல் சரியில்லை என்று தள்ளிவிட்டால் அனைத்துப் பள்ளி நிர்வாகிகளும் அந்தப் பாடத்தை தங்கள் பள்ளிகளில் வைக்க மாட்டார்கள்.

பள்ளியில் பாடம் நடத்திய நேரம் போக பொருள் ஏதும் பெறாமல் பலருக்குச் செட்டியார் பாடம் சொல்லி வந்தார். நாள் முழுவதும் தமிழையே சிந்தித்து, தமிழையே கற்பித்து வந்த தியாகராசச் செட்டியார் 19-1-1888ம் ஆண்டு காலமானார்.
பழம் பெரும் புலவர் மரபில் மின்னிக் கொண்டிருந்த தாரகை மறைந்தது.





நன்றி: தமிழ்மணி