பாண்டித்துரைத் தேவர்

பைந்தமிழ் காத்த பார்வேந்தர்
பாண்டித்துரைத் தேவர்
21.03.1867 – 02.12.1911

.   இராமநாதபுரம் மாமன்னராக விளங்கிய வள்ளல் பாண்டித்துரைத்தேவர், வள்ளல் பொன்னுசாமி- பர்வதவர்த்தினி நாச்சியார் தம்பதிக்கு 1867ம் ஆண்டு மார்ச் 21ம் தேதி இராமநாதபுரம், இராஜவீதி "கவுரி விலாசம்" என்ற இல்லத்தில் பிறந்தார். பெற்றோர் இட்ட பெயர் உக்கிரபாண்டியன். நாடறிந்த பெயரே பாண்டித்துரைத் தேவர்.

.  1901ம் ஆண்டு சொற்பொழிவாற்றுவதற்காக வள்ளல் பாண்டித்துரைத்தேவர் மதுரை வருகை தந்தபோது, "திருக்குறள் பரிமேலழகர் உரை" நூலை, விழா ஏற்பாடு செய்த அமைப்பாளரிடம் கேட்டார் தேவர். எங்கு தேடியும் அந்நூல் கிடைக்கவில்லை. பாண்டிய மன்னர்கள் முச்சங்கம் கண்டு முத்தமிழ் வளர்த்த மதுரையில், திருக்குறள் பரிமேலழகர் உரை கிடைக்காதது கண்டு, தமிழ்ப் பற்றுள்ள தேவரின் மனம் வருந்தியது.

.   பாண்டித்துரைத்தேவர், தமிழ் வளர்த்த மதுரையில், 1901ம் ஆண்டு செப்டம்பர் 14ம் நாள், நான்காம் தமிழ்ச் சங்கத்தை நிறுவினார். அச்சங்கத்தின் தலைவராகவும் பொறுப்பேற்றார். பழந்தமிழ் நூல்கள் அனைத்தையும் வெளியிட விரும்பினார்.

.   தமிழ்ச் சங்கம் சார்பில் செந்தமிழ்க் கலாசாலை என்னும் பெயரில் தரமான தமிழ்க் கல்லூரியும் அமைத்தார் பாண்டித்துரைத்தேவர்.

.  பழந்தமிழ்க் கருவூலமாக, பாண்டியன் நூலகம் அமைத்தார் பாண்டித்துரைத்தேவர்,.

௬.   "தமிழ் ஆய்வு மையம்" அமைத்த பாண்டித்துரைத்தேவர், மதுரையில் நான்காம் தமிழ்ச்சங்கம் சார்பில், ஆய்வு நுணுக்கமும், ஆழமான புலமையும் மிக்க பெரும் புலவர்களின் கட்டுரைப் பெட்டகமாக 1903ல் "செந்தமிழ்" என்னும் நற்றமிழ் மாத இதழும் மலரச் செய்தார். அந்த "செந்தமிழ்" ஏடு நூற்றாண்டு விழா கண்ட ஏடு.

.     ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்து சுதேசி கப்பல் ஓட்டிய வ.உ.சியின் சுதேசி கப்பல் நிறுவனத்துக்கு நிதி உதவி வழங்கிய பாண்டித்துரைத் தேவர் பின்னர் அந்த நிறுவனத்தின் தலைவராகவும் பொறுப்பேற்றார்.

.    சிவஞானபுரம் முருகன் காவடிச் சிந்து, சிவஞான சுவாமிகள் பேரில் இரட்டை மணிமாலை, இராஜ இராஜேஸ்வரி பதிகம், தனிப்பாடல்கள் உள்ளிட்டவற்றை இயற்றியுள்ளார் பாண்டித்துரைத் தேவர்.