ஔவை. துரைசாமி

உரைவேந்தர்
ஔவை. துரைசாமி
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்திற்கு அருகில் உள்ள ஔவையார் குப்பம் என்னும் சிற்றூரில், சுந்தரம்பிள்ளை - சந்திரமதி தம்பதிக்கு மகனாக 1902ம் ஆண்டு செப்டம்பர் 5ம் தேதி பிறந்தார் அருந்தமிழ் வித்தகர் ஔவை சு.துரைசாமி. 

இலக்கிய ஆராய்ச்சித் துறையில் வித்தகராக விளங்கியவர்;  பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சிப் பேராசிரியராகத் திகழ்ந்தவர்;  செந்தமிழில் சீரிய புலமை பெற்று விளங்கியவர்; தமிழ் உணர்வுள்ள நூற்றுக்கணக்கான மாணவர்களை உருவாக்கியவர்பல்வேறு நூல்களுக்கு "உரைநயம்" கண்டவர்; ஊர்களின் உண்மைப் பெயர்களைத் தக்க சான்றுகளுடன் நிறுவியவர் நா நலம் மிக்கவர்ஆங்கிலத்திலும் வடமொழியிலும் புலமை பெற்றவர்; தாம் வாழ்ந்த காலத்திலேயே "சித்தாந்த கலாநிதி", "உரைவேந்தர்", தமிழ்ச் செம்மல்", எனும் தகைசால் பட்டங்களைப் பெற்றவர்.
 
கரந்தையை விட்டு வெளியேறிய பின்னர், 1929ம் ஆண்டு முதல் 1941ம் ஆண்டு வரை வட ஆர்க்காடு மாவட்டக் கழக உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்தார். திருப்பதி திருவேங்கடவன் கீழ்த்திசைக் கல்லூரியில் 1942ம் ஆண்டு ஆராய்ச்சியாளராகப் பணியில் சேர்ந்தார்


பின்னர், 1943ம் ஆண்டு முதல் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆராய்ச்சித் துறையில், விரிவுரையாளரானார். எட்டு ஆண்டுகள் தொடர்ந்து அங்கு பணிபுரிந்தார். மதுரை தியாகராசர் கல்லூரியில் 1951ம் ஆண்டு பேராசிரியராக விளங்கினார். 

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும்போது, சைவ சமய இலக்கிய வரலாறு, ஞானாமிர்தம் போன்ற அரிய நூல்களை எழுதினார். அந்நூல்கள் பல்கலைக்கழகத்தின் வெளியீடுகளாக வெளியிடப்பட்டன.

புறநானூறு ,ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, நற்றிணை, சிலப்பதிகாரம் , மணிமேகலை , சீவக சிந்தாமணி , திருவருட்பா , சூளாமணி ஆகிய நூல்களுக்கு உரை எழுதியதுடன் ,  ஞானசம்பந்தர் வழங்கிய ஞானவுரை , திருமால் போற்றும் திருப்பதிகவுரை , திருவோத்தூர் தேவாரத் திருப்பதிகவுரை , சிவஞான முனிவர் அருளிச் செய்த சிற்றுரை, யசோத காவியம் மூலமும் உரையும் பண்டை நாளையச் சேர மன்னர் வரலாறு , தமிழ் நாவலர் சரிதை,மதுரைக் குமரனார் , வரலாற்றுக் காட்சிகள், தெய்வப் புலவர் திருவள்ளுவர் , புது நெறித்தமிழ் இலக்கணம், பெருந்தகைப் பெண்டிர், ஊழ்வினை , ஔவைத் தமிழ், தமிழ்த் தாமரை, ஆர்க்காடு, தமிழ் இலக்கிய வரலாறு, பண்டைக் காலத் தமிழ் மன்னர் வரலாறு போன்ற அரிய நூல்களைத் தமிழுக்கு அளித்துள்ளார்.

உரைவேந்தர், தமிழுக்கு சிறப்பாகத் தொண்டு ஆற்றியதற்காக 1964ம் ஆண்டு மதுரைத் திருவள்ளுவர் கழகம் "பல்துறை முற்றிய புலவர்" என்ற பாராட்டுப் பத்திரம் வாசித்தளித்துச் சிறப்பித்தது. அதே ஆண்டு ஔவை சு.துரைசாமிக்கு மணிவிழா நடத்தப்பட்டது. இராதா தியாகராசனார் தம் ஆசிரியப் பெருந்தகையின் உயர் பண்புகளைப் பாராட்டி "உரைவேந்தர்" எனும் பட்டம் வழங்கி தங்கப் பதக்கம் அளித்தார்


1980ம் ஆண்டு அன்றைய ஆளுநர் பிரபுதாசு பி.பட்வாரி உரைவேந்தருக்குத் "தமிழ்ப் பேரவைச் செம்மல்" எனும் பட்டம் வழங்கி சிறப்பித்தார். தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் சார்பில், "தமிழ்த்தொண்டு செய்த பெரியார்" எனும் பட்டமும், கேடயமும் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.

அன்னைத் தமிழுக்காக தமக்கு நினைவு தோன்றிய நாள் முதல் வாழ்நாளின் இறுதி வரையிலும் பாடுபட்ட தமிழ்ச் சான்றோரான, "உரைவேந்தர்" தமது எழுபத்தொன்பதாவது வயதில் 1981ம் ஆண்டு ஏப்ரல் 3ம் தேதி இயற்கை எய்தினார். உரைவேந்தரின் தமிழ்த்தொண்டு, உலகம் உள்ளவரை நிலைத்திருக்கும்.