மங்கலங்கிழார்

வடவெல்லைத் தமிழ் முனிவர்               மங்கலங்கிழார்


வட ஆர்க்காடு மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த புளியமங்கலம் என்ற சிற்றூரில் ஜயாசாமி - பொன்னுரங்கம்மாள் என்னும் பெற்றோருக்கு 1895ல் மகவாய்ப் பிறந்தார். பெற்றோர் இட்ட பெயர் குப்பன். பின்னாளில் குப்புசாமி என்றே அழைக்கப்பட்டார்.

மங்கலங்கிழாரின் மேற்பார்வையில் "கலா நிலையம்" என்ற இலக்கிய இதழ் உருவானது. பள்ளி இளைஞர்கள் பலரை ஒன்று சேர்த்துத் தமிழ்ப் பண்டிதர்களாக உருவாக்கினார்.  "இலக்கணப்புலி" கா..கோவிந்தராச முதலியாரிடம் இலக்கண - இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்தார்.

கா..கோவிந்தராசர் முயற்சியால் மங்கலங்கிழாருக்கு பெரம்பூர் கலவல கண்ணன் செட்டியார் உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியர் பணி கிடைத்தது. அப்பள்ளியில் பதினைந்து ஆண்டுகள் பணியாற்றினார். பிறகு உடல்நிலை காரணமாக ஆசிரியர் பணியைத் துறந்தார். 

"செக்கிழுத்த செம்மல்" ..சி.யுடன் நட்பு கொண்டு, அவருடன் இணைந்து திருக்குறளில் நன்கு தேர்ச்சி பெற்றார். அதன் பிறகு சைவ, வைணவ நூல்களையெல்லாம் ஆராய்ந்து தெளிவு பெற்றார். 

வேதாந்தத் துறையில் சிறந்து விளங்கிய வடிவேல் செட்டியாரிடம் வேதாந்தம் கற்றுத் தெளிந்தார். புளியமங்கலத்தில் ஓர் இரவு பள்ளியைத் துவக்கி, இளைஞர்களுக்கு தமிழ்ப் பாடமும், முதியவர்களுக்கு வேதாந்த பாடமும் நடத்தி வந்தார்.

ஏழைக்கு எழுத்தறிவித்தல் எல்லாவற்றையும் விட மிகச் சிறந்த அறம் என்பதை உணர்ந்து தெளிந்தார். 1941ம் ஆண்டு குருவராயப்பேட்டையைத் தலைமையிடமாகக் கொண்டு "அறநெறித் தமிழ்க் கழகம்" என்ற ஓர் அமைப்பை ஏற்படுத்தினார். பின்னர் அவ்வமைப்பு 16 ஊர்களில் தனது கிளைகளைக் கொண்டு செயல்பட்டது. இதன் தலைவராக மங்கலங்கிழார் திகழ்ந்தார். இவ்வமைப்பில் மாணவர்கள் இலவசமாக சேர்கப்பட்டனர்.

வசதியும், தேர்ச்சியும் உள்ள மாணவர்களைப், புலவர் தேர்வுக்கு அனுப்பி வைத்தார் மங்கலங்கிழார். அதன் பயனாய் இருபத்தைந்து பேர் புலவர் பட்டம் பெற்று அரசு வேலையில் சேர்ந்தனர். இவரின் விடாமுயற்சியால் நூற்றுக் கணக்கானோருக்கு ஆசிரியர் பணி கிடைத்தது. 

தவளமலைச் சுரங்கம் , தமிழ்ப் பொழில் , சிறுவர் சிறுகதைகள், வடவெல்லை , தமிழ்நாடும் வடவெல்லையும், சகலகலாவல்லிமாலை - விளக்க உரை , நளவெண்பா - விளக்க உரை , இலக்கண விளக்கம் ,  இலக்கண வினா விடை, நன்னூல் உரை , தனிக் கட்டுரைகள் போன்றவை மங்கலங்கிழார் எழுதிய அரிய நூல்களாகும்.

சித்தூர் மாவட்ட தமிழ்ப் பகுதிகள் தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட வேண்டும் என்பதற்காக காந்திய வழியில் அறப்போராட்டம் நிகழ்த்தி சிறை சென்றார்.

1953
ம் ஆண்டு ஆகஸ்டு 31ம் நாள் மாமனிதர் மங்கலங்கழார் இயற்கை எய்தினார். தம் வாழ்வின் இறுதி மூச்சுவரை தமிழுக்காகவும், தமிழரின் நலனுக்காகவும் தன்னலங்கருதாது தொண்டு செய்த மங்கலங்கிழார் என்றுமே போற்றி நினைவு கூரத்தக்கவர்
.