சற்குணர்


தமிழ்மணி

சற்குணர்

1877ம் ஆண்டு மே மாதம் 25ம் தேதி பிறந்த தர்மராஜ் என்னும் சற்குணர். 

,
ஆங்கிலம் தமிழ் வடமொழி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கு மொழிகளிலும் சிறப்பாகத் தேர்ச்சி பெற்றவர். "தமிழர்களுக்குத் தமிழ் மட்டும் போதாது. பல மொழி அறிவு இருந்தால்தான் தமிழின் சிறப்பைச் சரியாகப் புரிந்து கொள்ளமுடியும்'' என்பார் இவர்.

ஆங்கில ஆசிரியராக வாழ்வைத் தொடங்கிய இவர், பின் நாளில் சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் தமிழாசிரியராக, பின் தமிழ்ப் பேராசிரியராக உயர்ந்தார். ஆசிரியப்பணியை சற்குணர் மிகுந்த ஈடுபாட்டுடனும் பரவசத்துடனும் செய்தார்.

 15.1.1925ல் தென்னியந்தியத் தமிழ்க் கல்விச் சங்கம் என்ற ஒரு சங்கத்தை நிறுவினார். சற்குணர் தலைவராகவும், அறிஞர் .கி.பரந்தாமனார் செயலாளராகவும் அதைத் திறம்பட நடத்தினர். அங்கு அக்கால சென்னை வித்துவான் தேர்வுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. அங்கு கற்றுத் தேர்ந்த மாணவர் பலர் பிற்காலத்தில் தமிழாசிரியர்களாகவும், தமிழ்ப் பேராசிரியர்களாகவும் புகழ் பெற்றனர். இந்தச் சங்கம் முழுக்க முழுக்க சற்குணரின் சொந்தச் செலவில் நடத்தப்பட்டது. கல்வியை ஓர் இறைத் தொண்டாகவே செய்தார் அவர்.


முழுக்க முழுக்க கற்பிக்கும் பணியிலேயே தன்னை ஈடுபடுத்திக் கொண்டதால், சற்குணர் எழுத்துப் பணியில் அதிகம் ஈடுபடவில்லை. ஆனால் இவர் தம் காலத்தில் சிறந்த ஆராய்ச்சியாளராகத் திகழ்ந்தார்.

சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்க்குழு உறுப்பினராகவும் திறம்படப் பணியாற்றியிருக்கிறார்.

இவருடைய பொது வாழ்வுப் பணிக்கு முடிசூட்டுவது போல, தமிழறிஞர் .கி.பரந்தாமனார் முயற்சியால் 1937ல் இவருக்கு 60ம் ஆண்டு விழா சென்னையில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. தமிழ்த் தாத்தா .வே.சா. தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் பல தமிழறிஞர்கள் கலந்து கொண்டு அவருடைய பன்முக ஆளுமையை எடுத்துக் கூறினர். "சற்குணர் மலரும் சற்குணீயமும்" என்ற அரிய சிறப்பு மலரும் அப்போது வெளியிடப்பட்டது.


தமிழுக்காகவே தன்னை அர்ப்பணித்துக்கொண்டு, 23.12.1952ல் இயற்கை எய்திய அம்மாமனிதரை நினைவு கூர்வது நம்மையும் நம்மொழி உணர்வையும் புதுப்பித்துக் கொள்வதாக அமையும்