மீனாட்சிசுந்தரம் பிள்ளை

திரிசிரபுரம் மகாவித்துவான்                          மீனாட்சிசுந்தரம் பிள்ளை

06.04.1815-01.02.1876
சிதம்பரம்பிள்ளை - அன்னத்தாச்சி தம்பதியருக்கு 6.4.1815 இல் மகனாகப் பிறந்தார் மீனாட்சிசுந்தரம். மீனாட்சிசுந்தரம் தந்தையிடம் தமிழ் கற்றார். நெடுங்கணக்கு, ஆத்திச்சூடி, அந்தாதிகள், கலம்பகங்கள் பிள்ளைத்தமிழ், நூல்கள் , மாலைகள் சதகங்கள், நிகண்டு, கணிதம் , நன்னூல் போன்ற இலக்கண நூல்களையும் கற்றுத் தேர்ந்தார். கவிபுனையும் ஆற்றலும் பெற்றார்.

பல சிவத்திருத்தலங்களுக்குச் சென்று, அத்தலங்களைப் பற்றித் தலபுராணங்களும்பதிகங்களும், அந்தாதிகளும் அங்குள்ள இறைவன், இறைவி மீது பிள்ளைத்தமிழ் கலம்பகம், கோவை உலா தூது குறவஞ்சி முதலான நூல்களும் இயற்றினார். 

1851ல் திரிசிரபுரத்திலிருந்தவர்கள் விரும்பிய வண்ணம் சைவ எல்லப்ப நாவலர் இயற்றிய "செவ்வந்திப்புராணம்" என்னும் நூலைப் பதிப்பித்தார்.

1860 முதல் மாயூரத்தில் வசிக்கத் தொடங்கி, அங்கிருந்து அடிக்கடி திருவாவடுதுறை மடத்திற்குச் சென்று வந்தார். மீனாட்சிசுந்தரம் பிள்ளை. திருவாவடுதிறை ஆதீன வித்துவானாக நியமிக்கப்பட்டார். ஆதீனகர்த்தர் அம்பலவாணதேசிகர் மீது கலம்பகம் பாடினார். ஆதீனகர்த்தர் மீனாட்சிசுந்தரம் பிள்ளைக்கு "மகாவித்துவான்" என்ற பட்டத்தை வழங்கி மகிழ்ந்தார். அன்று முதல் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை என்று அழைக்கப்பட்டார்.

1871ல் .வே.சாமிநாதய்யர் மகாவித்துவானின் மாணாக்கரானார். இறுதிவரைத் தம் ஆசானோடிருந்து பல்வேறு நூல்களைப் பாடங்கேட்டார். மகாவித்துவான் திருவாவடுதுறையிலிருந்து பட்டீஸ்வரம், திருப்பெருந் துறைகுன்றக்குடி முதலிய தலங்களுக்குச்சென்றுவந்தார்.

பிள்ளையவர்கள் 1876ல் நோய்வாய்ப்பட்டார். .வே.சா திருவாசகம் அடைக்கலப்பத்தைப் பாட, 1.2.1876ல் தம் 61ம் வயதில் இறைவனடி சேர்ந்தார். மாணாக்கர் .வே.சா தம் ஆசிரியர் மகாவித்துவானின் வரலாற்றை நூலாக்கி அவரின் அளக்கலாகாப் புலமையை உலகறியச் செய்தார். 

பத்தொன்பதாம் நூற்றாண்டின் கம்பன் , இணையிலாப் புலவன், மெய்ஞானக் கடல் , நாற்கவிக்கிறை , சிரமலைவாழ் சைவசிகாமணி முதலிய முப்பதுக்கும் மேற்பட்ட பட்டங்களையும் விருதுகளையும் பெற்றார். 

தலபுராணங்கள் 22, சரித்திரம் 3, மான்மியம் 1, காப்பியம் 2, பதிகம் 4,பதிற்றுப்பத்தந்தாதி 6 , யமக அந்தாதி 3, மாலை 7, பிள்ளைத்தமிழ் 10 கலம்பகம் 2 , கோவை 3 , உலா 1, தூது 2 , குறவஞ்சி 1, பிறநூல்கள் 7 என இவர் செய்துள்ள மொத்த நூல்கள் ஏறத்தாழ 80. மேலும் பல தனிச் செய்யுள்களையும் இயற்றியுள்ளார்
.