மே.வீ.வேணுகோபாலப் பிள்ளை


செந்தமிழ்க் களஞ்சியம், இலக்கணத் தாத்தா  மே.வீ.வேணுகோபாலப் பிள்ளை
31.08.1896 - 04.02.1985

மே.வீ.வேணுகோபாலப் பிள்ளை சென்னை, சைதாப் பேட்டை மேட்டுப்பாளையத்தில் 31.08.1896 ல் பிறந்தார்.

தமிழிலும், ஆங்கிலத்திலும் நல்ல புலமை பெற்ற மே.வீ.வேணுகோபாலப் பிள்ளை மாணவர்களுக்குப் பாடப்புத்தகங்கள் எழுதுவதிலும் இணயற்றவர்.

இறையனார் அகப்பொருள்,தொல்.சொல் (நச்சர் உரை),
தஞ்சைவாணன் கோவை,வீரசோழியம், நளவெண்பா அஷ்டபிரபந்தம்,யாப்பருங்கலம் காரிகை, யசோதர காவியம் முதலியவை மே.வீ.வேணுகோபாலப் பிள்ளை தாமாக முயன்று பதிப்பித்த நூல்கள்.

இலக்கண உலகில் இவர் பதிப்பித்த யாப்பருங்கலக்காரிகை இன்றும் அறிஞர்களால் போற்றப்படுகிறது. இதற்கு இணையான ஒரு பதிப்பு இன்றுவரை இல்லை என்றே கூறலாம். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் இந்நூலை மீள்பதிப்பு செய்துள்ளது. இவர் பதிப்பாளராக மட்டுமன்றி படைப்பாளராகவும் இருந்துள்ளார்.

பத்திராயு() ஆட்சிக்குரியோர்,திருக்கண்ணபிரானார்
அற்புதவிளக்கு ,குணசாகரர் () இன்சொல் இயல்பு,
அரிச்சந்திர புராணச் சுருக்கம், அராபிக்கதைகள் 
முதலியன இவரது படைப்புகளில் குறிப்பிடத்தக்கவை. இவை தவிர, அம்பலவாணன்,இளங்கோவன் என்னும் இரு புதினங்களையும் படைத்துள்ளார்.

மொழி செப்பமாக இல்லாவிட்டால் கருதிய எச்செயலும் கருதியபடி நடவாது என்பதை உணர்ந்த மே.வீ.வே. மொழியில் பிழை நேராதபடி எச்சரிக்கையுடன் செயல்பட்டுள்ளார்.காஞ்சிபுரத்தில் "கச்சித் தமிழ்க் கழகம்" என்னும் ஓர் அமைப்பை நிறுவி பலருக்கும் தமிழ் உணர்வை ஊட்டினார்.அத்துடன் சீவகசிந்தாமணி குறித்து நெடியதோர் சொற்பொழிவாற்றினார். அதனால்தான் திரு.வி.. "சிந்தாமணிச்செல்வர்" என்னும் பட்டமளித்து இவரைப் பாராட்டினார்.

செந்தமிழ்க்களஞ்சியம் , கன்னித் தமிழ்க்களஞ்சியம், கலைமாமணி ஆகிய விருதுகளையும் இவர் பெற்றுள்ளார். நியூயார்க் உலகப் பல்கலைக்கழகம் மே.வீ.வே.க்கு டாக்டர் பட்டம் வழங்கி கெளரவித்தது.

கவியரசு கண்ணதாசன் உள்ளிட்ட பலரும் எழுதிய "பாவலர் போற்றும் மகாவித்துவான் மே.வீ.வே." என்னும் தொகுப்பு நூல் இவரது புகழை இன்றளவும் பேசிக்கொண்டிருக்கிறது.

தமிழ் இலக்கிய உலகில் 89 ஆண்டுகள் வரை உலவிய மே.வீ.வே. 4.2.1985 இறைவனடி சேர்ந்தார்.