க.வெள்ளைவாரணனார்

“தமிழ்மாமணி
.வெள்ளைவாரணனார்
திருநாகேசுவரத்தில் கந்தசாமி முதலியார் - அமிர்தம் அம்மையார் தம்பதியருக்கு மகவாக 1917ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி வெள்ளைவாரணனார் பிறந்தார்.

இவர் தமிழ் இலக்கியம், இலக்கணம், திருமுறைகள், சைவசித்தாந்தம் ஆகியவற்றைக் கற்றுத் துறைபோய நற்றமிழ் அறிஞர் ஆவார். ஓர் இலக்கியச் செல்வராகவும், இலக்கணக் கடலாகவும், கன்னித் தமிழ்க் காவலராகவும் விளங்கிய இவரை ஆன்றவிந்தடங்கிய அருந்தமிழ்ச் சான்றோர் எனலாம். இயற்றமிழோடு, இசைத்தமிழின் நுணுக்கங்களை அறிந்த நுண்ணறிவாளராகவும் திகழ்ந்தமை இவரின் தனிச் சிறப்பாகும்.

1935
ல் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வித்துவான் தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். 1935-37ல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு மாணவராகச் சேர்ந்து, தொல்காப்பியம் - நன்னூல் எழுத்ததிகாரம் ஒப்பீடு என்னும் ஆய்வேட்டினை எழுதி முடித்தார்.  வெள்ளைவாரணனார் 1938 முதல் 1943 வரை தஞ்சை கரந்தைத் தமிழ்க் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணிபுரிந்தார். 1943ல் வெள்ளைவாரணனார் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் விரிவுரையாளராகச் சேர்ந்தார். 1962ல் இவரின் புலமை நலனைக் கருத்தில் கொண்டு விதிகளைத் தளர்த்தி பல்கலைக்கழகம் இவருக்கு இணைப்பேராசிரியர் பதவி வழங்கியது. 1977ம் ஆண்டு துறைத்தலைவர் பொறுப்பை ஏற்றார். பல்கலைக்கழக ஆளவை மன்றம், ஆட்சிக்குழு ஆகியவற்றில் உறுப்பினராகவும் பணிபுரிந்தார். தம் 62ம் வயது வரை அங்குப் பணியாற்றி 1979ல் ஓய்வு பெற்றார். 1979 முதல் 1982ம் ஆண்டு வரை மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் சிறப்புப் பேராசிரியராகவும், துறைத்தலைவராகவும் பணியாற்றினார்.
தமிழ் இலக்கிய வரலாறு , தொல்காப்பியம் - நன்னூல் எழுத்ததிகாரம், தொல்காப்பியம் - நன்னூல் சொல்லதிகாரம் , தொல் - பொருள் உரைவளம் (ஏழு தொகுதிகள்), ஆகிய இலக்கண நூல்களையும், குறிஞ்சிப்பாட்டாராய்ச்சி , சங்ககால தமிழ் மக்கள் ஆகிய சங்க இலக்கியம் சார்ந்த நூல்களையும், திருவுந்தியார் , திருக்களிற்றுப்படியார் , சேக்கிழார் நூல்நயம் ,பன்னிரு திருமுறை வரலாறு , தில்லைப் பெருங்கோயில் வரலாறு , திருவருட்பாச் சிந்தனை ஆகிய சைவ சமயம் சார்ந்த நூல்களையும், தேவார அருள்முறைத் திரட்டுரை , திருமந்திர அருள்முறைத் திரட்டுரை, திருவருட்பயன் விளக்கவுரை ஆகிய உரை நூல்களையும், காக்கைவிடுதூது என்னும் படைப்பிலக்கியத்தையும் இசைத்தமிழ், நாடகத்தமிழ் சார்ந்த நூல்களையும் வெள்ளைவாரணனார் எழுதியுள்ளார்.

விபுலானந்தரின் யாழ் நூலுக்கு இவர் எழுதியுள்ள முன்னுரை இவரின் இசைப் புலமைக்குச் சான்றாக அமைந்துள்ளது. வெள்ளைவாரணனாரின் உரை நூல்கள் அவரின் நுண்மான் நுழை புலத்தினைக் காட்டுவன.

1938
ல் சென்னை மாகாண முதலமைச்சர் இராஜகோபாலாச்சாரியார் தமிழைக் கட்டாயப் பாடமாக்காமல், இந்தியைக் கட்டாயப் பாடமாக்கியதை எதிர்த்து 1939ல் பாந்தளூர் வெண்கோழியார் என்ற புனைப் பெயரில் காக்கை விடுதூது என்னும் நூலை எழுதி முதலமைச்சருக்கு அனுப்பினார். 

தமிழ் நாட்டிலுள்ள பல்வேறு இலக்கியம் மற்றும் சமய அமைப்புகளும், பல்கலைக்கழகங்களும் வெள்ளைவாரணனாருக்குப் சித்தாந்தச்செம்மல் , தமிழ்ப் பெரும்புலமைச் சான்றோர் , திருமுறை உரைமணி , செந்தமிழ்ச் சான்றோர் , தமிழ்மாமணி , சிவகவிமணி , திருமுறைத் தெய்வமணி , தமிழ்ப் பேரவைச் செம்மல் போன்ற பல்வேறு விருதுகளை வழங்கி பெருமை சேர்த்துள்ளன. தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் இவருக்கு 1985ல் கலைமாமணி விருதை வழங்கியது.

இப்புலவர் பெருமான் 1988ம் ஆண்டு ஜூன் 13ம் தேதி இவ்வுலக வாழ்வை நீத்தார்.