கா.சுப்பிரமணிய பிள்ளை

நுண்மாண் நுழைபுலச் செம்மல்
கா.சுப்பிரமணிய பிள்ளை  
 05.11.1888 - 30.04.1945

திருநெல்வேலியில், காந்திமதிநாத பிள்ளை-மீனாட்சியம்மை தம்பதியருக்கு 1888ம் ஆண்டு நவம்பர் 5ம் தேதி பிறந்தவர் கா.சுப்பிரமணிய பிள்ளை.

மதுரைத் தமிழ்ச்சங்கத் தேர்வில் முதல் மாணவராக வந்து பரிசு பெற்றார். 1910ல் வரலாற்றை சிறப்புப் பாடமாக எடுத்து பி.. பட்டம் பெற்றார். 1913ல் ஆங்கிலத்திலும், 1914ல் தமிழிலும் முதலாவதாகத் தேறி எம்..பட்டம் பெற்றார். பின்னர் 1917ல் எம்.எல்.பட்டம் பெற்றார்.

சென்னை சட்டக் கல்லூரியில் 1919 முதல் 1927 வரை விரிவுரையாளராகவும் சட்டப் பேராசிரியராகவும் பணியாற்றினார். 1929-30ல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில்  தமிழ்ப்பேராசிரியராக பணியாற்றினார்.

1934
ல் சென்னை மாகாணத் தமிழர் முதலாவது மாநாட்டினை சிறப்பாக நடத்தினார். அந்த மாநாட்டின் முடிவில் சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கம் நிறுவப்பட்டது. அதன் முதல் தலைவராக கா.சு.பிள்ளைத் தேர்ந்தெடுக்கப்பட்டார். நான்கு ஆண்டுகள் தலைவர் பதவியில் இருந்தார்.

1937-38
ல் கா.சு.பிள்ளை, பழந்தமிழ் நாகரிகம் அல்லது பொருளதிகாரக் கருத்து என்ற சிறந்த ஆராய்ச்சி நூலும், வானநூலும் எழுதி முடித்தார்.

1940
ல் திருநெல்வேலியில் நடைபெற்ற சென்னை மாகாணத் தமிழ்ச்சங்கக் கூட்டத்தில் கா.சு.பிள்ளைக்கு பல்கலைப் புலவர் என்ற பட்டம் வழங்கத் தீர்மானிக்கப்பட்டது. அதே ஆண்டு செட்டிநாடு இளவரசர் மு..முத்தையா செட்டியார் செப்புப் பட்டயம் வழங்கினார். 

பின்னர்
1940ல் மீண்டும் அண்ணாமலைப் பல்கலைக்கழத்தில் பணியேற்றார். தமிழ்த்துறைத் தலைவராக இருந்தவர் பல்துறைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றினார்.

ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதி, தமிழ் இலக்கியத்திற்கும், சமயத் துறைக்கும், சட்டத் துறைக்கும் சிறப்பாக தொண்டாற்றிய இவரது  படைப்புகளை வரலாற்று நூல்கள், ஆராய்ச்சி நூல்கள், சமய நூல்கள், அறிவுச்சுடர் நூல்கள், கலை நூல்கள், கதைகள், பதிப்பு நூல்கள், ஆங்கில மொழிபெயர்ப்புகள், ஆங்கில நூல்கள், சட்ட நூல்கள், கட்டுரைகள் எனப் பிரிக்கலாம்.

திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் வரலாறு, சேக்கிழார் சரிதமும் பெரிய புராண ஆராய்ச்சியும். இந்து சமயங்களின் சுருக்க வரலாறு, திருநான்மறை விளக்கம், முருகன் பெருமை, சைவச்சடங்கு விளக்கம், மெய்கண்ட நூல்களின் உரைநடை போன்றவை இவரின் சிறந்த படைப்புகளாகும்.


1940ல் இருந்தே வாதநோயால் பாதிக்கப்பட்டு உதவியாளர் ஒருவர் மூலம் எழுதிவந்தார். நுண்மாண் நுழைபுலச் செம்மல், பல்கலைப் புலவர் என பல சிறப்புகளைப் பெற்ற பேராசிரியர் கா.சுப்பிரமணிய பிள்ளை தம்முடைய 56வது வயதில் 1945ம் ஆண்டு ஏப்ரல் 30ம் நாள் இறையடி சேர்ந்தார்.