மு.கதிரேசச் செட்டியார்

“தமிழ் ஞாயிறு” ,மகாமகோபாத்தியாயர்”, “பண்டிதமணி”
"சைவ சித்தாந்த வித்தகர்", "முதுபெரும் புலவர்”
மு.கதிரேசச் செட்டியார்
16.10.1881-24.10.1953
  
 பண்டிதமணி , மு. கதிரேசச் செட்டியார்     அவர்கள் மகிபாலன் பட்டியில் முத்துக் கருப்பன் செட்டியார்- சிகப்பி ஆச்சி தம்பதியருக்கு 16.10.1881 அன்று தமிழ்த்தாயின் தவப்புதல்வராகத் தோன்றினார்.

பண்டிதமணி , மு. கதிரேசச் செட்டியார்     அவர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றியவர். தமிழிலும் வடமொழியிலும் புலமை பெற்றவர். ஏழு மாதம் கூடப் பள்ளிக் கூடத்தில் கல்வி பயிலாமல், பன்னிரண்டு ஆண்டுகள் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்து, தமிழ்ப்பணி ஆற்றிய தனிச்சிறப்பு இவருக்கு உரியது.

1934 ஆம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளரான பண்டிதமணி அவர்கள் படிப்படியாக உயர்ந்து இறுதியில் தமிழ் ஆராய்ச்சி துறைத் தலைவராக உயர்வுபெற்றார்.பத்து ஆண்டுகள் சீரிய முறையில் தமிழ்ப்பணியாற்றினார்.

 பண்டிதமணி மூன்று வயதில் இளம்பிள்ளை வாதத்தால் தாக்கப்பெற்றார். குடும்பச் சூழல் முறையான கல்வியைப் பெற அவருக்குத் துணை நிற்கவில்லை. பதினான்கு வயதில் பண்டிதமணியின் தந்தை காலமானார். அதே ஆண்டில் அவரது இடது காலும்,இடது கையும் வலுக்குறைந்தன. ஊன்றுகோல்  இல்லாமல் நடக்க இயலாது. இவ்வளவு துன்பங்கள் வாழ்வில் அணிவகுத்து வந்தும், அவற்றால் சிறிதும் நிலைகுலைந்து, நெஞ்சம் துவண்டு விடவில்லை அவர். உள்ள உறுதியால் தமது உடற் குறையை வென்றார். தம் முயற்சியால் தமிழும்,வடமொழியும் கற்றார். நடக்க முடியாத சூழ்நிலையில் இருந்ததால், வீட்டில் இருந்துகொண்டே படித்தார். முயற்சியும் மன உறுதியும் இருக்குமானால் உடல் ஊனமுற்றவர்களும் உயர்நிலையை அடைய முடியும் என்பதற்குக் கதிரேசனாரின் வாழ்க்கை எடுத்துக்காட்டாகும்.

இவர் தமது நுண்ணறிவால் வடமொழி நூல்களைத் தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளார். உதயணன் சரிதம், சுலோசனை, மண்ணியல் சிறுதேர், சுக்கிரநீதி, கெளடலீயம் பொருணூல், மாலதி மாதவம், பிரதாப ருத்திரம் , இரசங்காதாரம் முதலியவை இவரின் சிறந்த மொழிபெயர்ப்பு நூல்களாகும்.

உரைநடைக்கோவை 1 (சமயம் சார்ந்த கட்டுரைகள்), உரைநடைக்கோவை2 (இலக்கியம் சார்ந்த கட்டுரைகள்), நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு, பண்டிதமணி பாடல்கள்,பண்டிதமணி கடிதங்கள்,பதிற்றுப் பத்தந்தாதி ஆகியவை பண்டிமணி அவர்களின் அரிய நூல்கள்.

தமிழை உயிராகவும், சைவத்தைக் கண்களாகவும் போற்றிய பெருந்தகையாளர் அவர். "கதிர்மணி விளக்கம்"  என்ற தலைப்பில் பண்டிதமணி திருவாசகத்துக்கு எழுதிய பேருரையைப் பாராட்டாத தமிழறிஞர்களே இல்லை எனலாம். ஒல்லும் வகையெல்லாம் தமிழ்ப்பணியாற்றிய பண்டிதமணி அவர்கள் 24.10.1953 ஆம் நாள் எம்பெருமான் திருவடி நிழலை அடைந்தார்.