தத்துவ போதக சுவாமிகள்

தத்துவ போதக சுவாமிகள்

தத்துவ போதக சுவாமிகள் (1577 - 1656) என அழைக்கப்படும் றொபேட் டீ நொபிலியின் (Robert de Nobile S.J.) உரோமப் பிரபுத்துவக் குடும்பத்தைச் சார்ந்தவர். 26 வயதில் கத்தோலிக்கக் குருவாகி, தமிழ் நாட்டில் சமயப்பணியாற்ற விரும்பி, 1605ஆம் ஆண்டு் மே 20இல் கோவா வந்து சேர்ந்தார். 1606-ஆம் ஆண்டில் மதுரையை அடைந்து தமிழ்த்துறவி போல் வாழத்தொடங்கி கத்தோலிக்க 'மிஷனறி'யாகப் பணி புரிந்தார். இறுதியில் மயிலையில் 1656-இல் இறைவன் திருவடி யடைந்தார்.

தமிழகத்தில்
அவர் காலத்தில் உயர் இனத்தவராகக் கருதப்பட்டு வந்த பிராமணர்களைத் தம் சமயத்தில் ஈடுபடுமாறு செய்வதையே தலையாய குறிக்கோளாகக் கொண்டார். காவியுடையும் பூணூலும் அணிந்தார். புறத்தோற்றத்தில் தமிழ்த்துறவியாக மாற்றம் கொண்டாலும் அகவுணர்வில் சமயக்கோட்பாடுகளினின்று சிறிதும் வழுவவில்லை. தாம் அணிந்திருந்த ஐம்புரிகள் தமதிரித்துவத்தையும், இரண்டு வெள்ளிப் புரிகள் கிறிஸ்து பிரானின் உடலையும் உயிரையும் குறித்தனவாகக் கூறினார்.

வேதங்கள்
, புராணங்கள் ஆகியவற்றை ஆய்ந்தறிய வடமொழி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் தேர்ச்சி பெற்றார். தமிழில் நாற்பது உரைநடை நூல்கள், மூன்று கவிதை நூல்களையும் இயற்றியுள்ளார். இவற்றில் ஞானோபதேச காண்டம், மந்திர மாலை, ஆத்தும நிர்ணயம், தத்துவக் கண்ணாடி, சேசுநாதர் சரித்திரம், ஞான தீபிகை, நீதிச்சொல், புனர்ஜென்ம ஆக்ஷேபம், தூஷண திக்காரம், நித்திய சீவன சல்லாபம், கடவுள் நிர்ணயம், அர்ச். தேவமாதா சரித்திரம், ஞானோபதேசக் குறிப்பிடம், ஞானோபதேசம் ஆகிய நூல்கள் குறிப்பிடத்தக்கவை.

இவற்றைவிட
சமஸ்கிருதத்தில் எட்டு நூல்கள், அதிலே ஒன்றுக்குப் பெயர் 'கிறிஸ்து கீதை', நான்கு தெலுங்கு நூல்கள் ஆகியவற்றையும் எழுதினார்.